Jul 13, 2010

எம்.டி.வாசுதேவன் நாயர்

மலையாள திரையுலகின் தவிர்க்கமுடியாத ஆளுமைகளில் ஒருவர் எம்.டி.வி என்று தென்னிந்திய சினிமா உலகினரால் செல்லமாக அழைக்கப்படும் எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாள இலக்கியத்தின் செழுமையான நாவலாசிரியராக முத்திரை பதித்த இவர், 1968 ல் வெளிவந்த ‘முறைப்பெண்’ என்ற படம் மூலம் திரைக்காதாசிரியராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர்.

இவர் திரைக்கதையை கையிலெடுத்த போது, தன்னுடைய உணர்ச்சிகரமான நாவல்கள் மூலம் பெரும் புகழ் பெற்றிருந்தார். மாத்ருபூமி வார இதழில் துணை ஆசிரியராகவும் இதழியல் முகம் காட்டிய இவர், மலையாளத் திரையுலகு கண்ட உச்ச நட்சத்திர எழுத்தாளர் என்றால் அது மிகையில்லை.

ஏறத்தாழ நாற்பது வருடம் எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத் திரையுலகில் நட்சத்திர நடிகர்களுக்கு இணையான முக்கியத்துவத்துடன் இருந்தார். ஆட்சி நடத்தினார்.

மலையாளத் திரையுலகில் இரண்டு தலைமுறை நடிகர்கள் அவரது கதாபாத்திரங்களை நடித்திருக்கிறார்கள். இரண்டு தலைமுறை இயக்குநர்கள் அவரது கதையை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

எம்.டி. மலையாளத் திரையுலகில் ஒரு சமகால வரலாற்று நிகழ்வு என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மலையாளத் திரையுலகை திரும்பிப் பார்க்கையில் முக்கியமான படங்களாக நூறு படங்களைப் பட்டியலிட்டால் முப்பது படங்கள் எம்.டி. எழுதியவையாக இருக்கும். இன்றைய மலையாளத் திரை ரசனை என்பதே எம்.டி.யால் படிப்படியாக வளர்த்து எடுக்கப்பட்ட ஒன்றுதான் என்பது மூத்த மலையாள சினிமா விமர்சகர்களின் கருத்து.

இவருக்குப் பிறகு பத்மராஜன் போன்ற முத்திரை பதித்த திரைக்காதாசிரியர்கள் வந்தாலும் இவரது இடத்தை இன்றுவரை நிரப்ப ஆள் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியத் திரைகதைக்கு புதிய புதிய உத்திகளை பரிசளித்த இவர் , இத்தனை முதுமையிலும் கடந்த ஆண்டு கமல் நடிக்க இருந்த நான்கு மொழிப் படத்துக்கு கதை திரைக்கதை எழுதினார். - Tnks 4Tamil

No comments:

Post a Comment