Sep 16, 2011

ஒருநாள் போட்டியிலிருந்து திராவிட் இன்று ஓய்வு- லண்டனில் கடைசி போட்டி வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 16, 2011,

லண்டன்: ஒருநாள், டெஸ்ட், டி20 என கிரிக்கெட் போட்டியின் 3 வித போட்டிகளிலும் பங்கேற்றுள்ள 'இந்தியாவின் சுவர்' என்ற பாராட்டிற்கு சொந்தகாரான ராகுல் திராவிட் ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வுப் பெறுகிறார். தனது கடைசி போட்டியாக இங்கிலாந்தில் நடக்கும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் இந்தூரில் பிறந்த 1973ம் ஆண்டு பிறந்த ராகுல் திராவிட், பெங்களூரில் வளர்ந்தார். தனது 12வது வயதில் கர்நாடகா அணியின் 15 வயதிற்குள் உட்பட்டோர் அணியில் விளையாடினார்.

பின்னர் 17 வயது, 19 வயதிற்கு உட்பட்டோர் அணியிலும் இடம் பிடித்தார். தேசிய அளவிலான ரஞ்சிக் கோப்பை போட்டியில் 1991ம் ஆண்டு முதல் முதலாக பங்கேற்றார். 1995ம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி மூலம் இலங்கைக்கு எதிரான சிங்கர் கோப்பையில் முதல் முறையாக சர்வதேச அரங்கில் கால் பதித்தார்.

ஆனால், மோசமான ஆட்டதால் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. பின்னர் அவ்வப்போது அணியில் காயமடைந்தவர்களுக்கு பதிலாக போட்டிகளில் கலந்து கொண்டார். அதன்பின் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற மஞ்ச்ரேக்கர், வினோத் காம்பளி ஆகியோருக்கு பதிலாக 3வது இடத்தில் களமிறங்கும் நிரந்தர பேட்ஸ்மேனாக மாறினார் திராவிட்.

ராகுல் சரத் திராவிட் என்ற முழுப் பெயர் கொண்ட திராவிட் 1999ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளி்ப்படுத்தி மொத்தம் 461 ரன்கள் குவித்தார். 2003ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் துணை கேப்டனாகவும் செயல்பட்டார். 2005ம் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, 2007ல் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

ஒருநாள் அரங்கில் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அழைக்கப்பட்ட ராகுல் திராவிட் இன்று தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். திராவிட் இதுவரை மொத்தம் 343 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 12 சதம், 82 அரைசதம் உட்பட 10,820 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் ஒருநாள் அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்களில் 7வது வீரராகவும், இந்திய அளவில் சச்சின், கங்குலிக்கு பின் 3வது வீரராகவும் உள்ளார்.

சிறந்த பில்டராகவும் விளங்கிய திராவிட் ஒருநாள் அரங்கில், இந்தியா அணியின் வீக்கெட் கீப்பராக 73 போட்டிகளில் பங்கேற்று, 71 கேட்ச்சுகள், 13 ஸ்டெம்பிங்கள் செய்துள்ளார். தனிப்பட்ட முறையில் பீல்டராக செயல்பட்டு 125 கேட்ச் பிடித்துள்ளார்.

பந்து வீசும் வாய்ப்பை மிக அரிதாக பெற்ற திராவிட், மொத்தம் 4 வீக்கெட்களை தனது பந்து வீச்சு மூலம் வீழ்த்தியுள்ளார். முகமது அசாரூதீன் தலைமையிலான அணியில் அறிமுகமான திராவிட், தொடர்ந்து, அஜய் ஜடேஜா, சச்சின், சவுரவ் கங்குலி, டோணி என 5 கேப்டன்களுக்கு கீழ் செயல்பட்டுள்ளார். 79 போட்டிகளில் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தியுள்ளார்.

1997ல் சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த திராவிட், அதன்பின் இதுவரை 12 சதங்களை அடித்துள்ளார். இதில் நியூசிலாந்திற்கு எதிரான 153 ரன்களே அதிகபட்சமான ரன்.

No comments:

Post a Comment