Jul 21, 2011

டெஸ்ட் போட்டிகள்

1877ல் முதல் போட்டி:

டெஸ்ட் போட்டிகள் தொடங்கிய வரலாற்றை அறிய 1877ம் ஆண்டுக்குப் போக வேண்டும். முதல் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே அந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி தொடங்கியது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட அந்த முதலாவது சர்வதேச டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது.

சர்வதேச அளவில் நடந்த முதல் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் போட்டித் தொடராக இது இருந்தாலும், சர்வதேச அளவில் நடந்த முதல் கிரிக்கெட் போட்டி என்ற பெருமை, 1844ம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்த போட்டிக்கே உண்டு.

டெஸ்ட் போட்டிகளை எல்லா நாடுகளும் விளையாட முடியாது. ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் அந்தஸ்தைப் பெற்ற அணிகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியும்.

10 டெஸ்ட் அணிகள்:

டெஸ்ட் போட்டிகள் தோன்றி 100 ஆண்டுகள் ஆனதைக் கெளரவிக்கும் வகையில் 1977ம் ஆண்டு மார்ச் 12 முதல் 17ம் தேதி வரை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. உலகின் முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா இதே வித்தியாசத்தில்தான் வென்றது என்பது சுவாரஸ்யமானது.

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள்தான் முதன்மையானதாகும். தேசிய அளவிலான அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்தப் போட்டிகளை தற்போது 10 அணிகள் ஆடி வருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் வரிசையில் முதலாவதாக இணைந்த அணிகள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா. 2வதாக 1889ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்தது. 3வது அணியாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1928ம் ஆண்டு இணைந்தது.

4வது அணியாக நியூசிலாந்து 1930ம் ஆண்டும், 5வதாக இந்தியா 1932ம் ஆண்டும் சேர்ந்தன.

6வது அணியாக பாகிஸ்தான் 1952ம் ஆண்டும், 7வது அணியாக 1982ம் ஆண்டு இலங்கையும், 8வது அணியாக ஜிம்பாப்வே 1992ம் ஆண்டும் இணைந்தன.

9வது அணியாக இணைந்தது வங்கதேசம். 2000மாவது ஆண்டு முதல் இது டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது.

ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் என்ற நிலை இருந்தது. பின்னர் ஐசிசி அதை மாற்றி தேசிய அணிகளுக்கிடையே மடடும்தான் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று நிர்ணயித்தது.

முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. ஆனால் ஒரு நாள் போட்டிகள் வந்த பிறகு டெஸ்ட் போட்டிகள் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது. இதனால் தற்போது கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகள் 3 முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடுகின்றன.

ஆஷஸ் தொடர்:

உலக அளவில் புகழ் பெற்ற டெஸ்ட் தொடர் என்றால் அது ஆஷஸ் தொடர்தான். எப்படி இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் இரு நாடுகளிலும் அக்னியைப் பரப்புகிறதோ அதேபோலத்தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளும்.

இரு அணிகளும் சேர்ந்து 1877ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தபோதிலும், 1882 முதல்தான் இரு அணிகளுக்கிடையிலான போட்டிகளும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறத் தொடங்கின.

அந்த ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதின. அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து தனது முதல் இனனிங்ஸில் 101 ரன்களை எடுத்தது. பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 122 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையி்ல இங்கிலாந்து ஆட வந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீ்ச்சால், வெற்றி இலக்கை அடைய 8 ரன்களே தேவை என்ற நிலையி்ல இங்கிலாந்து ஆட்டமிழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் ஒரு அணி வென்றது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்து வெல்லும் என்ற நம்பிக்கையை விட, நமது காலணி நாடான ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து எப்படியும் வென்று விடும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் அப்படியே சமைந்து போய் விட்டனர். மைதானமே மயான அமைதியில் மூழ்கியது. இருப்பினும் அதிர்ச்சியை அமைதியாக உள்வாங்கிக் கொண்ட இங்கிலாந்து ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்களை பாராட்டி கைதட்டினர்.

இங்கிலாந்தின் படு தோல்வியை இங்கிலாந்து பத்திரிகைகள் கிழி கிழியென்று கிழித்தெறிந்தன. அதில் படு முக்கியமானது தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ் எழுதிய தலையங்கம்தான்.

அதில், ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது. அதன் உடல் எரிக்கப்பட்டு ஆஷஸ் அதாவது சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்று எழுதியிருந்தனர். அதுதான் உலக அளவில் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம். அன்று முதல் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர்களுக்கு ஆஷஸ் தொடர் என்றே பெயரிட்டு விட்டனர்.

ஆஷஸ் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஒரு முறை இங்கிலாந்தில் நடந்தால் மறு முறை ஆஸ்திரேலியா என மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 123 போட்டிகளிலும், இங்கிலாந்து 100 போட்டிகளிலும் வென்றுள்ளன. 87 போட்டிகள் டிராவாகியுள்ளன.

டெஸ்ட் போட்டி சாதனைகள்:

அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அணி - இங்கிலாந்து, 907 போட்டிகள்.

இந்தியா விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 447. இதில் வென்றது 108, தோற்றது 139, டிராவானது 198.

ஒரு டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணி இலங்கை - 952-6 டிக்ளேர்ட்.

ஒரு இன்னிங்ஸில் மிகவும் குறைந்த ரன்கள் எடுத்த அணி நியூசிலாந்து - 26 ரன்கள்.

அதிக ரன் குவித்த சச்சின்:

டெஸ்ட் போட்டிகளில் அதிகம் ரன் குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர்- 14,692 ரன்கள்.

அதிக பேட்டிங் சராசரியை வைத்திருந்த வீரர் டான் பிராட்மன்- 99.94

ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த வீரர் பிரையன் லாரா - 400.

டெஸ்ட் போட்டிகளில் அதிக செஞ்சுரிகள் போட்டவர் சச்சின் - 51

அதிவேகமாக சதம் அடித்த வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் - 56 பந்துகளில் சதமடித்தார்.

டெஸ்ட் போட்டிகளி்ல் அதிக முறை இரட்டை சதம் அடித்த வீரர் டான் பிராட்மன் - 12

அதிக முறை முச்சதம் போட்ட வீரர்கள் லாரா, ஷேவாக், பிராட்மன், கிறிஸ் கெய்ல் - தலா 2 முறை.

அதிக விக்கெட் வீழ்த்திய முரளீதரன்:

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் முத்தையா முரளீதரன்- 800 விக்கெட்கள்.

அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் முரளீதரன் - 67

அதிக முறை 10 விக்கெட் வீழ்த்தியவர் முரளீதரன் - 22

ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் - ஜிம் லேகர், அனில் கும்ப்ளே தலா 10 விக்கெட்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்தவர் டிராவிட் - 202

அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரர் சச்சின் - 177

இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் கிரிக்கெட் நாளை தனது 2000வது போட்டியை ரசிகர்களுக்கு படைக்கவிருக்கிறது. இப்போட்டியில் இந்தியா வெல்லுமா, இங்கிலாந்து வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது. அதை விட முக்கியமாக இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தைப் போடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களிடம் நிலவுகிறது.

No comments:

Post a Comment