Jul 19, 2011

மதுரை


மதுரை மற்றும் மதுரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து, தமிழ்சினிமாவுக்கும், தமிழ்ரசனைக்கும் நல்ல சாப்பாடு போட்டுவரும் இயக்குனர்களின் பங்களிப்பை மறுப்பதற்கில்லை. இந்தவரிசையில் தமிழ்சினிமாவும் மதுரை மண்ணும் என்ற நான்கு வார்த்தைகளை எழுதிப்பார்த்தால் முதலில் வந்து நிற்கிற பெயர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
ஸ்டூடியோவுக்குள் சிறைபட்டுக் கிடந்த தமிழ்சினிமாவை மக்கள் வாழும் பகுதிக்கு இழுத்துக் கொண்டு வந்த முதல் இயக்குனர். இதை தமிழ்சினிமா வரலாறு எழுதியிருக்கும் தியோடர் பாஸ்கரனே குறிப்பிட்டு பாராட்டுகிறார். உண்மையில் பாரதிராஜா வாங்கிய எல்லா விருதுகளையும் விட வரலாறு அவருக்குச் சூட்டும் இந்தப்பாராட்டே சிறந்த விருது.
பாரதிராஜாவுக்கு முன்பு கருப்பு வெள்ளை காலத்தில் 1957-ல் சோமு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மக்களைப் பெற்ற மகராசி படத்தில் கோவை மாவட்டம் கதைக்களமாக சித்தரிக்கப்பட்டு கோவை வட்டார வழக்கும் முதன் முதலில் பயன்படுத்தப் பட்டது. சிவாஜி இதில் கொங்கு வழக்கில் பேசி நடித்திருப்பார். இதுவும் ஸ்டூடியோவுக்குள் படமாக்கப்பட்ட படம்தான் என்றாலும் ஒரு வட்டாரச் சினிமா என்ற அடையாளத்தை சூட்டிகொண்ட முதல்படம். ஆனால் நிலத்தின் கதையை அந்த நிலத்தில் வாழும் ரத்தமும் சதையுமான மனிதர்களின் கதையைச் யதார்த்தமாக முன்வைத்தது இவரது முதல் படைப்பான 16 வயதினிலே.
பாரதிராஜாவின் படைப்புக்கள் தமிழ்சினிமா தயாரிப்புத் தளத்திலும் கதையாடலிலும் கனிசமான தாக்கதை ஏற்படுத்தியதால் தமிழ்சினிமா கிராமத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இவர் தனது பேச்சு வழக்கு பற்றிச் சொல்லும் போது “எனக்கு இந்த கொச்சை மொழியில் தான் பேச முடியும். எதையும் வார்த்தை ஜோடனை இல்லாமல் வெளிப்படையாக பேசுபவன் நான்” என்கிறார். சிறந்த படைப்புக்காக தேசிய விருதுபெற்ற இவரது கருத்தம்மா வரை இவரது மண்வாசனைப் படங்கள் எந்த ஜோடனையும் இல்லாத நிலத்தின் யதார்த்தக் கதைகளாகவே இருந்தன. மண்வாசனனையைத் துறந்து இவர் இயக்கிய பல படங்கள் வெற்றியும் அதேநேரம் தோல்வியையும் தழுவியிருந்தாலும், இவரை மண்வாசனை இயக்குனர் என்ற அடையாளத்தை இவருக்குக் கொடுத்தது நேட்டிவிட்டி படங்கள்தான்.
இவரைப் பின்பற்றி மதுரையின் வாழ்வியல் சொன்ன சுசி.கனேசன், சேரன், ஆகியோர் பின்னால் தடம்மாறிப்போனார்கள். தங்கள் தனித்தன்மையை இழந்தார்கள். இதனால் கோடம்பாக்கதிற்குத் தினம் தினம் தென் மாநிலங்களிலிருந்து பேருந்துகளிலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ்சிலும் வந்து இறங்கி திருவல்லிக்கேனி மான்ஷன்களையும், வடபழனி, சாலிகிராமத்தை நாடிச் செல்லும் இளைஞர்களுக்கு தொன்னூறுகள் வரையிலும் மிகப்பெரிய முன்னோடியாக பாரதிராஜாவே தொடர்ந்தார்.
இப்போது சினிமாவை தேடிவரும்படி இளைஞர்களை சென்னைக்கு சுண்டி இழுக்கும் பாரதிராஜாவின் இந்த இடத்தை எடுத்துக்கொண்டிருக்கும் இரண்டுபேர் பாலாவும் அமீரும்.
சேது படத்தின் மூலம் தனது வரவை நிகழ்த்திய பாலவின் படைப்புலகம் யாதர்த்த தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை இயக்குனர்களில் பாலாவின் இடம் என்பதை யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என்று பாலா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படங்கள் நான்கு தான் என்றாலும் நூறு படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு சமமாக பாலாவை தமிழ்ச் சினிமா கொண்டாடுகிறது. ஒவ்வொரு முறையும் பாலாவின் படம் வெளியாகும் போது இந்த முறை விருது பாலாவுக்குத்தான் என்று தமிழ் சினிமா உலகமும் ரசிகர்களும் பேசிக் கொள்வார்கள். நான்காவது படத்தில் அது நடந்து விட்டது. அஹம் பிரம்மாஸ்மி என்று அகோரிகளின் ருத்ர தாண்டவத்தையும், சமூகபுறகனிப்புக்கு ஆளாகி பிச்சைப்பாத்திரம் ஏந்திவாழ்கிற விளிம்புநிலை மனிதர்களின் உலகையும் படம் பிடித்துக் காட்டிய "நான் கடவுள்' படத்துக்காக இந்தியாவின் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றுவிட்டவர். இவரது படைப்புலகம் பற்றி பாலாவின் நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான பிஸ்மி தெளிவாக ஒரு சித்திரத்தை தருகிறார்.
“நமது இயக்குநர்களில் பலரும் வெளிநாட்டுப்படங்களின் டி.வி.டி.க்களிலிருந்து கதையை உருவிக்கொண்டிருக்கும் சூழலில், தன்னை சுற்றி இயங்கும் மக்களிடமிருந்தே கதையைக் கண்டெடுக்கிறார் பாலா! கதையை மட்டுமல்ல, கதை மாந்தர்களையும் இவ்வாறு கண்டெடுப்பதுதான் பாலாவின் பலம். அப்படி கண்டெடுத்த கதாபாத்திரங்களை அரிதாரத்துக்குள் அமுக்கிவிடாமல், அவர்களின் அழுக்குகளையும் அப்படியே திரையில் வடிக்கிறார். இதுவே பாலாவின் படங்களுக்கு புதிய நிறத்தைக் கொடுக்கிறது.
அதே நேரம் கதாபாத்திரங்களில், குறிப்பாக கதாநாயகனின் பாத்திரத்தில் செலுத்தும் கவனத்தை, திரைக்கதையில் செலுத்தத் தவறுவதை அவரது பலவீனமாக சொல்லித்தான் ஆக வேண்டும். சேதுவைத் தவிர்த்து அவரது மற்ற எல்லாப் படங்களிலும் திரைக்கதையில் ஒரு தொய்வு இருப்பதை கூர்ந்து கவனித்தவர்களுக்கு இது புரியும். யாரும் தொடாத களத்தில் கதை சொல்ல வேண்டும் என்று எண்ணி, அதன்படியே படமெடுக்கிற பாலாவுக்கு கமர்ஷியல் என்ற பூச்சாண்டி மீது இனம்புரியாத பயம் இருப்பதையும் அவரது பலவீனப்பட்டியலில் சேர்த்தாக வேண்டும். பிதாமகன் படத்தில் ஒரு பாட்டுக்கு சிம்ரனை ஆட விட்டதும், நான் கடவுள் படத்தில் மாறுவேஷக் கலைஞர்களை வைத்து ரெக்கார்டு டான்ஸ் நடத்தியதும் பாலாவின் பயத்தினால் விளைந்த விபரீதங்கள்.
பாலாவின் பலங்களில் முக்கியமானது.. அவரது அசாத்தியமான ஆளுமை! படப்பிடிப்பின்போது பாலாவைப் பார்த்தவர்களுக்கு நிச்சயமாக வியப்பைத் தருகிற விஷயம் இது. பொதுவாக எல்லா இயக்குநர்களுமே ஹீரோக்களை ஸார் என்றோ, ஜி என்றோ, பாஸ் என்றோ, தலைவா என்றோ தாஜா பண்ணிப் பேசுவதுதான் கோடம்பாக்க இயல்பு. பாலாவினால் கற்பனையில் கூட இப்படி பேச முடியாது. அவர் எப்பேற்பட்ட முன்னணி ஹீரோவாக இருந்தாலும் படப்பிடிப்பின்போது பெயர் சொல்லித்தான், அதுவும் வா.. போ.. என ஒருமையில்தான் அழைப்பார். தன்னைவிட வயதில் குறைந்த நடிகர் என்றால் வாடா....போடா..! இதை திமிர் என்றோ, அகம்பாவம் என்றோ சொல்பவர்கள் பாலாவை மட்டுமல்ல, படைப்பாளியின் பலத்தையும் அறியாதவர்கள். திரையுலகமே நட்சத்திர நடிகர்களிடம் சரணாகதி அடைந்து கிடக்கும் இன்றைய சூழலில் இயக்குனர்களின் மீடியமாகிய சினிமாவில் எப்பேற்பட்ட விஷயம் இது?
இப்படியாக முன்னணி நட்சத்திரங்களிடம் கூட தன் சுயத்தை இழக்க விரும்பாத கர்வமிக்க படைப்பாளியான பாலா, தன் படத்தின் வியாபார வீச்சுக்காக அதே நட்சத்திரங்களை நம்புவதை நிச்சயமாக அவரது பலம் என்று சொல்ல முடியாது. சேது படத்தில் நடித்தபோது விக்ரமும், நந்தாவில் நடித்தபோது சூர்யாவும் வணிக மதிப்பில்லாத சாதாரண நடிகர்களே! அவர்களை வைத்து படம் எடுக்குமளவுக்கு அப்போது பாலாவுக்கிருந்த தைரியம் இன்றைக்கு எங்கே போனது? உச்சத்துக்குப்போய்விட்ட விக்ரமும், சூர்யாவும், ஆர்யாவும், விஷாலும் ஏன் தேவையாய் இருக்கிறார்கள் பாலாவுக்கு? சினிமாவின் வெளிச்சமே படாத புதுமுகங்களை தேடிப்பிடித்து அவர்களை தேர்ந்த நடிகர்களாக மாற்றக் கூடிய திறமையும், வலிமையும் தனக்கிருப்பதை அவரே மறந்துபோனதுதான் வருத்தம்” என்கிறார் பிஸ்மி.
இவரது பட்டறையில் இருந்து வெளிவந்த அமீர், மௌனம் பேசியதே படத்தில் ஆரம்பித்து ராம், பருத்திவீரன் வரை மாறுப்பட்ட திரைப்படங்களைக் கொடுத்திருக்கிறார். அதில் பருத்திவீரன் தேர்ந்த படைப்பாக பாராட்டுக்களை அள்ளியது. இவர் தனது படங்களில் சஸ்பென்ஸ் என்ற எலிமெண்டை நுட்பமாகப் பயன்படுத்தி கதையை நகர்த்துவதில் தனித்த திறமையுடயவராகவும் ஸ்டார் இமேஜுக்குள் அடக்காமல் பாத்திரப்படைப்பை தூக்கிநிறுத்தும் இயக்குனராகவும் இருந்தாலும் தற்போது வணிக ரீதியில் நட்சத்திரங்களை நம்பி எடுக்கப்படும் சினிமாவில் நுழைந்திருக்கிறார். கூடவே தன்னையொரு நட்சத்திரமாக வடிமைத்துக்கொள்ள முனைவதால், இயக்குனர் என்ற தளத்தில் தனது தனித்த ஆளுமையை இழந்துவிடலாம்.
அமீரின் திரைப்பயணம் வேகமாக திசைமாறிவிட்டாலும் இவரது உதவியாளர் சசிகுமார் தனது முதல்படமான ’சுப்ரமண்யபுரம்’ படத்தின் மூலம் மதுரையின் வெளித்தெரியாத சிதைந்த வாழ்வின் சித்தரத்தை ஒரு காதல், நட்பு, துரோகம் ஆகியவற்றை, அழுத்தமான காட்சிமொழியை பயன்படுத்தி உயிருள்ள படைப்பாக்கியிருந்தார். உண்மையில் மதுரையின் மறைமுகச் சித்திரமாகவே சுப்ரமணியபுரம் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. பாத்திரங்கள் மீது கதை நகர்ந்தாலும் ஒரு ஊரின் கதையாவே அது விரிகிறது. பொதுவாக தமிழ்பட இயக்குனர்கள் மீது வெறுப்பை உமிழும் எழுத்தாளர் சாரு நிவேதிதா, இந்தபடம் குறித்து சிலாகித்துப் பேசுகிறார்.
“ தமிழ் சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஒரு சிற்றூர் தன்னுடைய கதையைச் சொல்லியிருக்கிறது. பருத்திவீரனில் கூட மனிதர்களின் கதைதான் அதிகம். சுப்ரமணியபுரத்தில் சுப்ரமணியபுரம் என்ற ஊர்தான் பிரதான பாத்திரம். ஒரு காலகட்டத்தில் தன்னிடம் வாழ்ந்த சில மனிதர்களைப் பற்றிய கதையைச் சொல்கிறது சுப்ரமணியபுரம் என்ற ஊர். தன்னுடைய ஒவ்வொரு சுவரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு கதையையும் ஒரு வாழ்கையை தேக்கி வைத்திருக்கும் சுப்ரமணியபுரம் அதில் ஒரு பகுதியை இந்தப் படத்தின் மூலமாகச் சொல்கிறது.
படத்தின் ஒரு கட்டத்தில் முக்கிய பாத்திரங்களில் ஒருவனான அழகரைக் கொலை செய்ய ஒரு அடியாள் கூட்டம் துரத்துகிறது. கைவசம் ஆயுதம் எதுவும் இல்லாததால் திருப்பித் தாக்கவோ தற்காத்துக்கொள்ளவோ முடியாமல் தப்பி ஓடுகிறான் அழகு. சுமார் பத்து நிமிடங்கள் செல்லும் இந்தத் துரத்தல் காட்சியைப் போன்ற ஒன்றை நான் ஹாலிவுட் ‘சேஸிங்’ காட்சிகளில் கூடக் கண்டதில்லை.
சுப்ரமணியபுரத்தின் துரத்தல் காட்சியில் வரும் எண்ணற்ற குறுகிய சந்துகளின் மூலம் சுப்ரமணியபுரம் என்ற ஊர் தன்னுடைய ஆண்டாண்டுக் கால வரலாற்றைச் சொல்வதாகத் தோன்றுகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை ஹரப்பாவின் நூற்றுக்கணக்கான சந்துகளும் தெருக்களும் இன்று நமக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருப்பதைப் போல், சுப்ர மணியபுரத்தின் இந்தக் குறுகிய சந்துகளும், அதில் எதிர்படும் மனிதர்களும் தமிழ் சினிமா உள்ளவரை அந்த ஊரின் கலாச்சார சாட்சியமாய் விளங்கிக் கொண்டிருக்கும்.” என்று விமர்சன சாட்சியாகச் சொல்கிறார் சாரு.
ஆனால் சசி தனது இரண்டாவது படத்தில் மாநகரில் இடம்பெயர்து வாழ வரும் கிராமத்து மனிதர்களை நகரவாழ்கை மொத்தமாக வஞ்சித்து விடுவதாக ஒரு ஒற்றைப் பரிமான பார்வையில் கதைச்சொல்லிய வகையில், சுப்ரமணியபுரம் படத்தின் நேர்த்தியான திரைக்கதாசிரியரை தூங்கவிட்டுவிட்டார் சசிகுமார்.
தமிழ்சினிமாவின் இப்போதைய தலைவலி, அல்லது ரசிகர் ஏமாந்துபோகும் ஒரு புதியபோக்கிற்கு பாலா, அமீர், சசிகுமார் வருகை முக்கிய காரணமாகி இருக்கிறது. இவர்களது படங்கள் தந்த தாக்கத்தை உள்ளவாங்கி புற்றீசல் போல மதுரையையும் , மதுரை மாவட்டத்தையும் கதைக்களமாக கொண்டு வெளிவரும் அரைவேக்காட்டு சினிமாக்களின் படையெடுப்பு, குற்றப்பின்னனி கொண்ட ஒரு வாழ்கையே மதுரையின் அன்றாட வாழ்கை என்பதுபோல நிறுவப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும், மதுரைச்சம்பவம்,மதுரை டூ தேனீ வழி ஆண்டிப்பட்டி, மாத்தி யோசி, ரேணிகுண்டா, கோரிப்பாளையம், ஒச்சாயி, தூங்கநகரம் என்று ஐம்பது படங்கள் வெளிவந்தன. மதுரையென்றாலே அருவா,அடிதடி என்கிற அளவுக்கு இந்தவகை பிரதியெடுக்கும் சினிமா மதுரையைப் புரட்டிப் போட்டுவிட்டது.
மதுரையச் சுற்றியுள்ள கிராமங்களில் எல்லோரும் முதுகு சொரிவதற்குக்கூட அருவாளைத்தான் பயன்படுத்துவது போலொரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. ஒரு படம் ஒரே படம் வெற்றியடைந்து வசூலில் சாதனை புரிந்துவிட்டால் அதே கதையின் சாயலில் படங்களையும் பாத்திரங்களை உருவாக்குவதை மதுரை உள்ளிட தென்மாவட்டங்களைச் சேர்ந்த இயக்குனர்கள் கைவிட்டாகவேண்டும். அப்போதுதான் மதுரை குறித்த பிம்பத்தை மாற்றமுடியும்.
இன்றைய தேதிக்கு நேட்டிவிட்டியோடு எப்படிப் படம் பண்ணுவது என்று கோடம்பாக்கத்தில் நின்று கேட்டால், மதுரையில் கதை நடக்க வேண்டும், எல்லாரும் புதுமுகங்களாக இருக்கவேண்டும், மதுரை வட்டார வழக்கு பேச வேண்டும், முக்கிய காதாபாத்திரங்களில் இரண்டாவது படுகொலைசெய்யப்பட வேண்டும், தேவையென்றால் கொஞ்சம் ஜாதியைத் தொட்டுக்கொள்ள வேண்டும் என்று ஃபார்முலா சொல்லித்தருகிறார்கள் உதவீயக்குனர்கள் மதுரை மண்ணின் வாழ்க்கையும், மற்ற வட்டார வழக்குகளைக் காட்டிலும் மதுரை மொழியில் வீசும் மண்வாசனையும், எதார்த்தமான காட்சி சித்தரிப்புகள் ஏற்படுத்தும் சொந்த ஊர் குறித்த ஏக்கமும் ரசிகர்கள் இதுபோன்ற மதுரை நேட்டிவிட்டி படங்களோடு நெருக்கமாவதற்கு இன்னுமொரு காரணமாக இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் தயாரிக்கப்படும் ஒவ்வோரு படத்தின் வெற்றி தோல்வி என்பது மதுரை ரசிகர்களின் எதிர்வினையைப் பொறுத்துதான் என்று கணக்குச் சொல்கிறார் சினிமா விநியோகஸ்தர்கள். கல்யாணம், காதுகுத்து, சாவில் தொடங்கி, கட்சிக்கூட்டம் வரை அத்தனைக்கும் விதவிதமான சுவரோட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தும் ஊடக மனநிலை மதுரையில்தான் அதிகம். அதேபோல வெற்றுப் பந்தாவை ஆபாசமாகப் பிரகடனம் செய்யும் கட்அவுட்டுகளும், பிளக்ஸ் பேனர்களும் அங்குதான் அதிகம். ஹீரோ ஹீரோயின்களை கடவுள் போல வழிபடுவது, ஒரு புதுப்படம் வந்தால், அந்த படத்தின் கதாநாயகனின் கட் அவுட்டை திரையரங்க வாசலில் நிறுத்தி வைத்து அதற்கு பாலாபிஷேம் செய்வது, ஆரத்தி எடுப்பது போன்ற அராதனைகளுக்கும் மதுரைதான் தாய் வீடு. மொத்தத்தில் எல்லா நடிகர்களுக்கு தலைமை ரசிகர் மன்றங்கள் தீவிரமாகச் செயல்படும் புண்ணியத்தலமும் மதுரைதான். இளைஞர்களின் முடி அலங்காரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் புதிய போக்குகளும், தமன்னா வளையல், டாப்ஸி ஸ்கர்ட், அனுஷ்கா சேலை, த்ரிஷா ஜிமிக்கி, அசின் செயின் ஆகிய அனைத்துமே மதுரையில்தான் ரிலீஸ். கோவில் திருவிழா, பிரம்மாண்டமான சீரியல் செட், வாண வேடிக்கைகள், நாட்டுபுறக்கலைகள், , இதிகாச மேடை நாடகங்கள், ரிக்கார்டு டான்ஸ் அத்தனைக்கும் செறிவான மையம் மதுரைதான்.
அதேநேரம் தமிழ் மரபின் நாட்டார் வழக்காறுகளும், சடங்குகளும் வழிபாடுகளும் தீவிரத்தோடு பின்பற்றப் படுவது மதுரையில்தான். மஞ்சுவிரட்டிலிருந்து, மாமன் மகளைக் கட்டித் தரவில்லை என்பதற்காகக் கொலை செய்யும் வீரத்திற்கும் மதுரைதான் தலைநகரம். இந்த வாழ்கையில் எத்தனை மண்மனம் நிறைந்திருக்கிறதோ அதே அளவுக்கு பெரும்பாண்மை மக்களின் வாழ்கையும் முன்னேற்றமடையாத விளிம்புநிலை வாழ்வாகவே இன்னும் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
மதுரை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து அந்த வாழ்வில் அமிழ்ந்து அதைத் திரையில் பதிவுசெய்யத் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு மத்தியில் வெற்றிமாறன் ஆச்சர்யமானவர். சென்னையில் பிறந்து வளர்ந்த ஒருவர் மதுரை மாவட்டத்தின் கலாச்சாரக் கூறுகளை அவதானித்து ஒரு நிலம் சார்ந்த கதையை கொடுப்பது ஆச்சர்யகரமானது.
சீறிப் பாயும் சேவல் சண்டைப் பின்னணியில் குரோதமும் துரோகமும் கொப்பளிக்க, மனித மனங்கள் ஆவேசமாகப் போரிடும் காட்சிக்களமாக விரிகிறது. - இவரது 'ஆடுகளம்’!வழக்கமான மதுரை சினிமா என்று எதிர் பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் இனிய ஏமாற்றம். மதுரை தமிழர்களின் குருதியில் கலந்துவிட்ட ஒரு கலாசார விளை யாட்டைக் களமாகத் தேர்ந்தெடுத்து, அதை நுட்பமாகச் செதுக்கியிருக்கும் வெற்றி மாறனை மதுரையின் வாழ்வு சுண்டி இழுத்திருப்பது அந்த மண்ணினின் வாழ்வியலுக்கு கிடைத்த வெற்றி.
வெற்றிமாறன் போன்ற விதிவிலக்குகளை நீக்கிவிட்டுப் பார்த்தாலும் இன்றைய தேதியில் தமிழ் சினிமாவை உலகதரத்துக்கு கொண்டு செல்லும் படங்களை இயக்க முனையும் இயக்குனர்களை தருவதில், தந்துக்கொண்டிருப்பதில் மதுரைக்கு நிகராக மதுரையே இருக்கிறது. அதற்குக் காரணம் மதுரையின் வாழ்கைதான். அங்கே இந்த வாழ்கை இருக்குவரை கலைஞர்களை மதுரை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பதுதான் தமிழ்சினிமாவுக்கு தலைமையேற்றிருக்கும் மதுரையின் மண்வாசனை ரகசியம்.
4தமிழ் மீடியாவுக்காக: ஆர்.சி.ஜெயந்தன்

No comments:

Post a Comment