Jul 11, 2011

பத்மநாபசுவாமி

பத்மநாபசுவாமி காத்து வந்தது கையில் சிக்காமலிருக்கட்டும்!!

இந்திய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய பல மேதைகளும் வியந்து குறிப்பிட்டிருப்பது அதன் கலைச் சிறப்பைத்தான்.
“உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்தியாவிற்கு நிகரான கலை நயத்தை, கட்டிட நுணுக்கத்தைப் பார்க்க முடியாது. இந்த கலை நயம் வெறும் அழகுணர்ச்சி மட்டுமல்ல, விலைமதிப்பில்லாத பொக்கிஷங்களைப் பாதுக்காக்கும் ரகசிய பிரதேசங்களும் கூட,” என்கிறார் வரலாற்று ஆசிரியர் கிளிங்கிங்ஸ்மித்.
இந்த ரகசியங்களைத் தேடிப் பிடித்து கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்ட பல வெள்ளையர் கூட்டங்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்தின் போது இந்தியாவில் அலைந்ததையும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரு கோயில் போதும், இந்தியாவின் மொத்த ஆண்டு பட்ஜெட்டையும் போட்டுவிடலாம்’, என்கிறார் மேடிஸன்.
இவர்களுக்கெல்லாம் வெகு நீண்ட காலத்துக்கு முன்பே, அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 430 ஆண்டுகள் முன்பே, இந்தியாவின் தங்க வளம் பற்றி இப்படிச் சொல்கிறார் வரலாற்றின் தந்தை எனப்படும் கிரேக்க அறிஞர் ஹெரோடோடஸ்.
“இந்தியர்களிடம் உள்ள தங்கத்தின் அளவு அளப்பரியது. பூமியைத் தோண்டி, ஆறுகளின் மணலிலிருந்து, காடுகளைக் குடைந்து, பாலை வெளியை அகழ்ந்து இவர்கள் பெரும் தொகையான தங்கத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தோண்டுமிடமெல்லாம் தங்கம். மக்கள் பழங்குடிகளைப் போல இருந்தாலும், தங்கத்தை பாதுகாக்கத் தெரிந்திருக்கிறார்கள்!”
-கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வரிகள் இவை. இத்தனைக்கும் ஹெரோடோடஸ் இந்தியாவைப் பார்த்ததே இல்லை!
கிபி 1000 ஆண்டில் தொடங்கி 1026-ம் ஆண்டுவரை தொடர்ந்து இந்திய அரண்மனைகளையும் கோயில்களையும் கொள்ளையடித்த ஆப்கன் சுல்தான் முகமது (கஜினி முகமது) தனது தலைநகரான கஜினியை உலகிலேயே செல்வமிக்க நகராக மாற்றினான் என்பது சரித்திரம்.
இந்த விரிவான அறிமுகத்துக்கான காரணம் நீங்கள் அறிந்ததுதான்… பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறைகளில் திருவாங்கூர் மன்னர் சேமித்து வைத்திருக்கும் தங்க, வைர வைடூரிய, பணக் குவியல்கள் பற்றி இன்றைக்கு பிரமிக்க வைக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் பண்டைய மற்றும் இடைக்கால இந்தியாவின் வரலாற்றை, மக்கள் வாழ்க்கை முறைகளை, மன்னராட்சியைப் பற்றிப் படித்தவர்களுக்கு நிச்சயம் இது ஒரு அதிசய செய்தியாக இருக்காது.
அன்றைய மன்னர்கள் எதிரி நாட்டிடமிருந்து பறித்து வந்த செல்வங்களை, அண்டை நாடுகளிடமிருந்து பெற்ற பரிசுகளை சேர்த்து வைக்க பாதாள மண்டபங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். பெரும்பாலும் அரண்மனையின் ஒரு பகுதியிலேயே இவை அமைந்திருக்கும். இவற்றுக்கு இணையான பாதாள அறைகள் கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவை போர்க்காலங்களில் மன்னர் குடும்பத்துக்கு பாதுகாப்பான மறைவிடங்களாகவும், ராஜாங்க பொக்கிஷங்களை ஒளித்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
அரண்மனைக்கும் இந்த கோயில்களுக்கும் இடையில் ரகசிய சுரங்க வழிகளும் நிறைய உண்டு. பல கோயில்களில் இந்த வழிகளை இப்போதும் காணலாம்.
தங்கத்தின் பயனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்தவர்கள் இந்தியர்கள். எனவே பல வழிகளில் தங்கத்தை கண்டுபிடித்து, டன் கணக்கில் சேமித்து வைத்தனர் மன்னர்கள். உலகமே பண்டமாற்றில் இருந்தபோதும், இந்தியர்கள் குறிப்பாக தமிழ் மன்னர்கள் தங்க நாணயங்களை புழக்கத்தில் விட்டார்கள். ஒரு குறுநில மன்னனே பல ஆயிரம் கிலோ தங்கம் வெள்ளி வைர வைடூரிய சொத்துக்களை வைத்திருந்தான் என்றால் மாமன்னர்களின் பொக்கிஷங்களைப் பற்றி சற்றே கற்பனை செய்ய முடிகிறதா?
ஆப்கானிய சுல்தான்கள் (பாபர், அக்பர், ஷாஜகான் போன்றவர்கள் சுல்தான்கள் அல்ல, இந்தியாவின் மன்னர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்) மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின்போதுதான் இந்திய மன்னர்களின் சொத்துக்கள் முற்றாகக் கொள்ளை போயின.
சுல்தான்கள் படையாக வந்து கோயில்களையும் அரண்மனைகளையும் கொள்ளையடித்து, மூட்டை மூட்டையாக வைர வைடூரியங்களை அள்ளிச்சென்றனர். “குதிரைகளின் முதுகில் சுமக்க முடியாத அளவு தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர் சுல்தான்கள். அப்படி கொண்டு சென்றபோது, அந்த நகை மூட்டைகளிலிருந்து சிந்திய நகைகளை வைத்து ஒரு பெரும் ராஜ்யத்தையே ஸ்தாபித்துவிடலாம். குறிப்பாக கஜினி கடைசி முறையாக கொள்ளையடித்துப் போனபோது வழியெங்கும் ரத்தமும் நகைக் குவியல்களும் சிதறிக் கிடந்தன”, என்கிறார் கிளிங்கிங் ஸ்மித்.
தங்கம், வைர வைடூரியங்கள், நவரத்தினங்களை இந்தியர்களுக்கு நிகராக சேமித்தவர்கள் உலகில் யாருமில்லை. இன்றும் கூட பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளின் அருங்காட்சியகங்களை அலங்கரிப்பவை இந்தியர்களிடமிருந்து களவாடப்பட்ட வைரங்கள் அல்லது விலைமதிக்க முடியாத உயர்தர ஆபரணங்களாகவே இருப்பதைப் பார்க்கலாம்.
இந்த பொக்கிஷம் இருப்பது முன்பே தெரியும்….

1940-ம் ஆண்டு பத்மநாபசுவாமி கோயில்... படம்: தி ஹிந்து
திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பத்மநாபசுவாமியின் ஆலயத்துக்குள் இத்தனை பெரிய பொக்கிஷம் இருப்பது சர்வநிச்சயமாய் வெளியாருக்கு தெரியாது என பலரும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை வேறு.
1931-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி இதே பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் திறக்கப்பட்ட தகவல், வியாழக்கிழமை வெளியான இந்து நாளிதழில் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. அன்றைக்கு இந்து பத்திரிகையின் நிருபராக இருந்தவர் (இன்னும் உயிருடன் உள்ளார்), 69 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
1930களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியுள்ளது. பொருளாதார நெருக்கடி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கப்பம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம், அரசு நிலங்களை மக்களுக்கு விற்று பணம் திரட்டவேண்டிய நிலை போன்றவை காரணமாக, கோயிலில் வைக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான பொக்கிஷத்தை எடுத்தாள திருவிதாங்கூர் மகாராஜாவுக்கு யோசனை கூறப்பட்டது.
அன்றைக்கு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக இருந்தவர் ஸ்ரீசித்திரை திருநாள் பலராம வர்மா. அவரிடம்தான் இந்த நிலவரைகளின் சாவிகள் இருந்துள்ளன. 1931 டிசம்பர் 6-ம் தேதி இந்த நிலவரைகளில் ஒன்றை முதலில் திறக்க முடிவு செய்தார் மன்னர்.
பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு அந்த பாதாள அறையின் பெரிய பூட்டை சாவி போட்டு திறக்க முயன்றனர். ஆனால் பூட்டு அசைந்து கொடுக்கவில்லை. உடனே, கதவை உடைக்கச் சொன்னார் மன்னர். சுவற்றுக்கு சேதாரம் இல்லாமல் பாதுகாவலர்கள் மூலம் கதவு உடைத்து திறக்கப்பட்டது. உள்ளேயிருந்து விஷ வாயு அல்லது விஷ ஜந்துக்கள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் முன்யோசனையாக ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. ராட்சத மின் விசிறிகள் மூலம் காற்று செலுத்தப்பட்டது அறைக்குள். பின்னர் உள்ளே நுழைந்தார்கள்.
வெண்கலத்தால் ஆன நான்கு பெரிய பெட்டிகள் முதலில் இருந்தன. அவற்றில் ஏராளமான தங்க நாணயங்கள் குவிந்திருந்தன. அடுத்து அந்த அறைக்குள்ளேயே ஒரு சிறிய அறைமாதிரி அமைப்பு இருந்தது. அந்த அறை முழுவதும் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இருந்தன. இந்த உள்ளறையின் மேல் பகுதியில் பெரிய தங்கக் குடங்கள், தங்க கிரீடங்கள், தங்க தகடுகள் காணப்பட்டன. தங்க குடங்கள் மட்டுமே 300 இருந்தன அன்றைக்கு.
அடுத்து மரத்தாலான ஒரு பெரிய பேழை இருந்தது. இந்தப் பேழையில்தான் கணக்கிடமுடியாத அளவு நவரத்தினங்கள், வைரங்கள், பவளம், மரகதம் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் ஆறு தனித் தனி அறைகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த அறைக்குப் பின்னால் ஆறு பாதாள அறைகள் இருந்தன. அவற்றுக்கு மகாபாரதகோணத்து கல்லர, ஸ்ரீபண்டாரத்து கல்லர, வேதவ்யானகோணத்து கல்லர மற்றும் சரஸ்வதிகோணத்து கல்லர என பெயரிட்டிருந்தனர்.
இவற்றை மேற்கொண்டு திறக்க முற்படாத மகாராஜா சித்திரைத் திருநாள், அங்கிருந்த நகைகள் மற்றும் நாணயங்களை தனது கருவூலத்துக்கு கொண்டு சென்று மதிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றிலிருந்து ஒரு பொன்னைக் கூட எடுக்காமல், மீண்டும் அவற்றை இந்த கோயில் பாதாள அறையிலேயே வைத்து பூட்டியுள்ளனர்.
1932-ல் அரசவையில் இதுபற்றி தெரிவித்த சமஸ்தான திவான் ஆஸ்டின் (இவரும் வெள்ளையர்தான்), பத்மநாபசுவாமி கோயிலில் எடுத்து மதிப்பிடப்பட்ட பொன்னில் ஒன்றைக்கூட மகாராஜா பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த பொக்கிஷ ரகசியம் பிரிட்டிஷாருக்கும் தெரிந்திருந்தது என்பதுதான் முக்கியமானது.
எமிலி கில்கிறிஸ்ட் ஹாட்ச் என்ற ஆங்கிலப் பெண்மணி 1933-ம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளார். அப்போது பத்மநாபசுவாமி நிலவறை மற்றும் பொக்கிஷங்கள், அவற்றை மகாராஜா திறந்து பார்த்து மதிப்பிட்டது போன்றவற்றை கேட்டு அறிந்ததோடு நில்லாமல், அந்த இடத்தையும் போய் பார்த்து தனது பயணக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த பயணக் குறிப்பு “Travancore: A guide book for the visitor” என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வெளியீடாக 1933-ல் வந்துள்ளது. இன்னொன்றையும் எமிலி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 1908-ம் ஆண்டே ஒரு முறை இந்த பாதாள அறைகளைத் திறக்க முயன்று, அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, இந்த பொக்கிஷங்கள் குறித்த பல உண்மைகள் அரச பரம்பரையினருக்கும் தெரிந்தே இருந்தது. பிரிட்டிஷாருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இந்து கோயில்கள் விஷயத்தில் பயம் அதிகம்.
ஆற்காடு போரின்போது பெரும் நோயால் பாதிக்கப்பட்ட ராபர்ட் க்ளைவ், நோய் குணமானதால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அளித்த பிரமாண்ட மரகத மாலை, லார்ட் பிளேஸ் அளித்த ஏராளமான தங்க, வைர ஆபரணங்கள் இன்றும் அந்த கோயிலில் பக்தர்களுக்கு காட்டப்படுகின்றன. எனவே பக்தி நம்பிக்கை மிகுந்திருந்த அந்த காலத்தில் சாமி பயம் காரணமாகக் கூட வெள்ளையர்கள் பத்மநாபசுவாமி நிலவறைகளுக்குள் போகத் துணிந்திருக்க மாட்டார்கள்.
ஆகவே, இந்த பொக்கிஷங்கள் குறித்து யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தவறு. வழிவழியாய் பலர் அறிந்து வைத்திருந்தனர். வேண்டுமானால், இவ்வளவு பொக்கிஷம் இருக்கும், அதன் மதிப்பு 5 லட்சம் கோடிகளைத் தாண்டும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம்.
இதில் உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா… இந்த நகைகள், தங்க நாணயங்கள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் இன்னமும் அப்படியே புத்தம் புதிதாக ஜொலிப்பதுதான். இந்தியர்களின் கலைத் திறமைக்கு இதைவிட ஒரு சான்று கிடைக்காது.
மேலும் 1931-ல் சித்திரை திருநாள் மகாராஜா முதல் பாதாள அறையில் கணக்கெடுத்தபோது இருந்த அதே 300 தங்கக் குடங்கள் இந்த முறை கணக்கெடுத்தபோதும் இருந்ததாக நீதிபதிகள் குழு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த பாதாள அறைகளில் பொக்கிஷம் இருப்பது தெரிந்தும், சமஸ்தான முறை உயிரோடு இருந்தபோதே அவற்றை பயன்படுத்திக்கொள்ளாமல், வெறும் காவலர்களாக, அனந்தனுக்கு தாசர்களாக இருந்த மன்னர் மற்றும் அவரது பரம்பரையினரின் நேர்மையை என்னவென்பது!
இந்த சொத்துக்கு உரிமையாளர் யார்… என்ன செய்யலாம்?
இந்தக் கேள்விதான் இன்று இந்தியாவில் உள்ள 120 கோடி பேரின் இதயங்களிலும் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
இப்போதே, இது தமிழ்நாட்டு மன்னர்களுடையது என்று ஒரு சாரார் கிளம்பிவிட்டார்கள். ராஜராஜ சோழன் கொடுத்தது என்று சிலர் ஆதாரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய சமூகம் எதையும் மிகைப்படுத்திப் பார்க்கிறது. அல்பமாக அனைத்துக்கும் அலைகிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்வதாக இருந்தால், இந்த சொத்துக்கள் சாதாரணமானவை என்பதை உணரமுடியும். காரணம், இவை சேமித்து வைக்கப்பட்ட காலத்தில் ஒவ்வொரு சமஸ்தானமும் இதைவிட பன்மடங்கு பொக்கிஷங்களைக் கொண்டிருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
1789-ல் திப்பு சுல்தான் திருவிதாங்கூர் மீது படையெடுத்த காலத்தில் இந்த அறைகள் நிரந்தரமாகப் பூட்டப்பட்டதாக சமஸ்தான குறிப்புகள் சொல்கின்றன. இந்த காலகட்டத்தில் மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி நடந்துவந்தது. அந்த நாயக்கர்களுக்கு கப்பம் கட்டிய ஒரு சிற்றரசுதான் திருவிதாங்கூர் சமஸ்தானம்.
ஒரு சிற்றரசுக்கு சொந்தமான கோயிலின் பாதாள அறையிலேயே இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருந்திருக்கிறதென்றால், மதுரை நாயக்கர்களின் பொக்கிஷத்தை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதற்கும் முன்பு சோழர்கள், பாண்டியர்கள் ஆட்சிக்காலங்களில் தமிழகத்தின் நிதிச் செழுமையை யோசித்துப் பார்க்க முடிகிறதா?
அரண்மனைகளிலிருந்த அனைத்தும் அந்நியரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான கோயில்களின் சொத்துகள் பிரிட்டிஷ் காலத்தில் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. இதற்கு சான்றாக காஞ்சிபுரம், மதுரை, தஞ்சை ஆலயங்களில் அன்றைக்கும் மிளிர்ந்த விலை உயர்ந்த ஆபரணங்கள், மன்னர்களால் நிவந்தமாக தரப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சியிலும் கூட வரியிலி நிலங்களாகத் தொடர்ந்த கணக்கற்ற ஏக்கர் விளை நிலங்களே சான்று. ஆனால் 1947க்குப் பிறகு சுதந்திரம், மக்களாட்சி, மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் நம்மவர்கள் அடித்த கொள்ளை கொஞ்சமல்ல.
அந்நியருக்குப் பயந்து கோயில்களில் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்களை, நம்மவர்களே கொள்ளையடித்தனர் மக்களாட்சியின் பெயரில்.
பெரிய கோயில்களை அமைச்சர் தரத்திலிருந்தவர்கள் கொள்ளையடித்தால், சின்னச் சின்ன கோயில்களின் ஆபரணங்களை, நிலங்களை வார்டு வட்டம் என தறுதலைகள் சுரண்டித் தின்று கொழுத்தார்கள்.
இன்று பத்மநாபசுவாமி கோயிலின் பொக்கிஷங்களைக் கண்ட பிறகு, அத்தனை கோயில்களையும் தோண்டிப் பார்த்து மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் கபளீகரம் செய்யத் துடிக்கிறார்கள்.
இதற்காகவாவது இந்த பெரும் பொக்கிஷத்தை வெளியில் காட்டாமலே இருந்திருக்கலாம். Thanks - The Hindu

No comments:

Post a Comment